மெளலவி அப்துல்லாஹ் ரஷாதி மறைவு!
தமிழ் நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத் திருவள்ளூர் மாவட்ட உலமா அணித் தலைவரும், திருவள்ளூர் மாவட்ட அரசு காஜியுமான மெளலானா மெளலவி அப்துல்லாஹ் ரஷாதிஅவர்கள் 09-10-2014 அன்று ஹஜ் பயணம் முடித்துச் சென்னை விமான நிலையம் வந்திறங்கியபோது மாரடைப்பு காரணமாக விமான நிலையத்திலேயே வபாத்தானார் (இன்னா லில்லாஹி...)
திருவள்ளூர் பெரிய பள்ளிவாசலில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தலைமை இமாமாகப் பணிபுரிந்து மக்கள் மத்தியில் செல்வாக்கோடு விளங்கி வந்த மெளலவி அவர்கள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து அல் அமானத் ஹஜ் சர்வீஸ் நிறுவன வழிகாட்டியாகச் சென்று தமது அருமையான உருது மொழிச் சொற்பொழிவால் ஹாஜிகளுக்குச் சிறந்த சேவையாற்றி வந்தார்.
தமிழ் நாடு முஸ்லிம் தொண்டு இயக்க மாநிலப் பொறுப்பாளராகவும், மாவட்ட உலமா அணித் தலைவராகவும் கடந்த 15 ஆண்டுகளாகத் தொண்டாற்றிவந்த மெளலவி பன்னூறு மாணவ-மாணவியரின் உயர்கல்விக்காகவும், வசதியற்ற பெண்களின் நிக்காஹ் நிகழ்விற்காகவும், அர்சிடமிருந்து பெறவேண்டிய முதியோர் பென்ஷன் முதலானவற்றைச் சமுதாய மக்கள் பெறுவதற்காகவும் தொண்டு இயக்கம் மூலம் உரிய வகைகளில் அருஞ் சேவை ஆற்றி வந்தார்.
தெளிந்த மார்க்க ஞானம், தேர்ந்த சொல்லாற்றல், சிறந்த எளிமைப் பண்பு, உயர்ந்த தொண்டுள்ளம் கொண்ட
மெளலானா மெளலவி அப்துல்லாஹ் ரஷாதி அவர்களது மறைவு சொல்லொணாத் துயரத்தை நல்குகிறது.
அன்னாரது உடல் இன்று அவரது சொந்த ஊரான விழுப்புரத்தில் இன்று (10-10-2014) வெள்ளிக்கிழமை
ஜும்ஆ தொழுகைக்குப் பின் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பள்ளி மையவாடியில் நல்லடக்கம்
செய்யப்படுகிறது.
அன்னாரது மறுமை பேற்றிற்காகவும், அவரது இல்லத்தார் அனவரது மன அமைதிக்காகவும்
இருகரமேந்தி இறைஞ்சுவோம்.
---------பேராசிரியர் டாக்டர் சேமுமு.முகமதலி
பொதுச் செயலாளர், தமிழ் நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்
0 comments:
Post a Comment